சென்னை:இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அரிசியலாக்குவதை பொதுமக்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். உண்மைக்கு என்றும் வலிமை அதிகம் அதைவிட என் அக்கா, நம் இதயதெய்வம் அம்மா என் அருகிலேயே இருந்து நடப்பவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை. இந்த நொடிவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதைப்பற்றி கவலைப்பட்டு இருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவுக்கு சாதித்து இருக்க முடியாது. அதே சமயம் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு நான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டவுடன், என் மனதில் தோன்றியது என்னவென்றால், ஜெயலலிதா உடன் தெருங்கி பழகிய முக்கிய அரசியல் தலைவர்கள், ஜெயலலிதாவுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள், அவரது நலனுக்காக பாடுபட்டவர்கள் என்று எல்லோரையும் அழைத்து, கழக முன்னோடிகள், நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பெரிய அளவில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்துவது, ஜெயலலிதா ஏழை எளிய மக்கள் பயனுறும் வகையில் மக்களுக்காக ஆற்றிய சேவைகள், எண்ணிலடங்கா மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து நிறைவேற்றுவது என்று எண்ணி இருந்தேன்.
விதி வசத்தால் நானோ சிறைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இங்கு இருந்தவர்கள் என்ன செய்தார்கள்? எதை சாதித்தார்கள் என்பதை கழகத் தொண்டர்களும், நாட்டு மக்களும் நன்றாக அறிவார்கள். ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக, அவருடைய மரணத்தையே அரசியலாக்கிவார்கள். கழகத்திற்கு எதிரானவர்கள், கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் குறிப்பாக திமுகவினர் ஜெயலலிதாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த நினைந்தது, நிறைவேறியது. அதற்கு நம் கட்சியினரே பலிகடா ஆனார்கள் என்பது தான் மிகவும் வேதனையான ஒன்று.
என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம் அதற்கு ஜெயலலிதாவின் மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது. நானும், ஜெயலலிதாவும் ஒரு தாய் வயிற்றில் பிறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் என்றைக்கும் நல்ல சகோதரிகளாக, நட்பிற்கு இலக்கணமாகவே வாழ்ந்தோம். இது இறைவன் இப்பிறவியில் எனக்களித்த பெரும் வரமாக எண்ணுகிறேன்.
ஜெயலலிதாவின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள். தற்போது, இவர்கள் பங்குக்கு என்னை விசாரிப்பதாக சொல்கிறார்கள். எத்தனை முறை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் ஜெயலலிதா மரணத்தைப் பற்றி விசாரித்து கொண்டே இருக்கலாம் ஆனால், உண்மை என்றைக்கும் மாறாது. ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த வித சந்தேகமும் கிடையாது. ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருந்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளித்து நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் துரதிஷ்டவசமாக தம்மையெல்லாம் திர்கதியாக விட்டுச் சென்றார் என்பதுநாள் எதார்த்தமான உண்மை. இந்த எதார்த்தத்தை கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.