தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விருதுநகர் பாலியல் வழக்கு: 'விரைந்து தண்டனை பெற்றுத் தருவோம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

சட்டம்-ஒழுங்குப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, விருதுநகர் வழக்கு இந்த மாநிலத்திற்ககாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இந்த வழக்கு 'விரைந்து தண்டனையைப் பெற்றுத் தருவதில்' ஒரு முன்னணி வழக்காக மட்டுமல்லாமல், இதுபோன்று தவறு செய்யக்கூடியவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்கப்போகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

By

Published : Mar 23, 2022, 4:55 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேரமில்லாத நேரத்தில், சட்டம்-ஒழுங்குப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

முன்னதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விருதுநகரில் இளம் பெண்ணை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ள விவகாரத்தில், திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.

சட்டப்பேரவையில் இவ்விவகாரம் குறித்துப் பதில் அளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'எதிர்க்கட்சித் தலைவர் நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி, சில பிரச்னைகளை, சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து சில செய்திகளை இங்கே எடுத்துக் கூறியிருக்கிறார். அதற்குரிய விளக்கத்தை நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

பெண் மருத்துவருக்கு பாலியல் வன்புணர்வுவேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பிரச்னையை இங்கே எடுத்துக் கூறியிருக்கிறார். வேலூர் மாவட்டம், சத்துவாச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்த ராமன் என்பவர், கடந்த 17-3-2022 அன்று சத்துவாச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் வ.உ.சி. நகரைச் சேர்ந்த பாலா (எ) பரத், மணிகண்டன் உள்ளிட்ட சிலர் தன்னை குடிபோதையில் தாக்கியதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.

இப்புகார் தொடர்பாக காவல் துறையினர், பரத், மணிகண்டன் உள்ளிட்ட மூவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, 17-3-2022 அன்று அதிகாலை கேலக்சி திரையரங்கம் அருகே ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோர் சி.எம்.சி. மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென ஆட்டோவில் ஏறியபோது, அவர்களைத் தனியிடத்திற்கு அழைத்துச்சென்று பரத், சந்தோஷ், மணிகண்டன் உள்ளிட்ட ஐவர், அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அவருடன் இருந்த ஆண் நபரை ஏ.டி.எம்-க்கு அழைத்துச்சென்று, சுமார் 40 ஆயிரம் ரூபாயைப் பறித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

4 பேர் கைதுமேலும், விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் என்பதும், ஆண் நபர் அதே மருத்துவமனையில் பணிபுரியும் நாக்பூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அவரது சொந்த மாநிலத்திற்குச் சென்றுள்ள நிலையில், நேற்று (22-3-2022) இணையவழி வாயிலாக அளித்த புகாரில், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 127/2022, இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 147, 148, 342, 365, 368, 376 (D), 376 (E), 395, 397, 506 (ii) உடன் இணைந்த பிரிவு 4-தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பரத் உள்ளிட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனி பாதுகாவலர் மீது தாக்குதல்ஓய்வுபெற்ற நீதியரசர் காரில் சென்று கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கே குறிப்பிட்டிருக்கிறார். 4ஆவது காவல் ஆணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிபதியுமான சி.டி. செல்வம் நேற்று, 22-3-2022ஆம் தேதி தனது காரில் தனி பாதுகாவலர், தலைமைக் காவலர் சக்திவேல் என்பவரோடு அசோக் நகர், நூறு அடி சாலையில் உள்ள கே.கே. நகர் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அவருடைய வாகனம் அப்பகுதியிலுள்ள போக்குவரத்து சிக்னல் அருகே நின்றபோது இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத 3 நபர்கள், ஆணையத் தலைவரின் வாகனத்தின்முன்பு தங்களது வாகனத்தை நிறுத்தியிருக்கின்றனர்.

உடனே, தனிப்பாதுகாவலர் சக்திவேல் வாகனத்தை நகர்த்தக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, அந்த நபர்கள் தனி பாதுகாவலரிடம் வாக்குவாதத்திலே ஈடுபட்டு, அவர்களுக்குள் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைத் தாக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கிறார்.

வழக்குப் பதிவுஇதில் காயமுற்ற தனிப்பாதுகாவலர் சக்திவேல், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார்; நலமுடன் இருக்கிறார். இச்சம்பவம் குறித்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் குற்ற எண் 127/2022, இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 341, 294-பி, 324, 307, 506 (ii) அதன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சென்னை மாநகர ஆணையருக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். இதுசம்பந்தமாக, நானே ஓய்வுபெற்ற நீதியரசர் பி.டி. செல்வம் அவர்களிடத்திலே தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, விவரங்களை எல்லாம் கேட்டிருக்கிறேன்.

சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்அடுத்து, விருதுநகரைப் பற்றி ஒரு பிரச்னையைச் சொல்லியிருக்கிறார். விருதுநகரிலே 22 வயது பெண்ணிடமிருந்து பாலியல் வன்முறை புகார் வந்தவுடன், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மீதியுள்ள 4 பேர் சிறார் நீதிமன்றத்தின் கூர்நோக்கு இல்லத்திலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சி.பி.சி.ஐ.டி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு அலுவலராக நியமனம்இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக, தற்போது வழக்கு, மாநில குற்றப் புலனாய்வு பிரிவு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இந்த வழக்கு தனி நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். விரைந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்படும். அதுவும் அதிகபட்ச தண்டனை பெறப்படும் என்பதை ஆணித்தரமாக, உறுதிபட இந்த மன்றத்திலே நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாடல் வழக்கு - டிஜிபிக்கு உத்தரவுஇந்த பாலியல் வன்முறை வழக்கினை ஒரு “மாடல் வழக்காக” நேரடியாகக் கண்காணிக்குமாறு காவல் துறைத் தலைவர், டிஜிபி-க்கு நான் உத்தரவிட்டுள்ளேன். நிச்சயம், பொள்ளாச்சி பாலியல் வழக்குபோல் இல்லாமல், வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வன்முறை வழக்குபோல் இல்லாமல், இந்த வழக்கு நிச்சயம் முறையாக நடத்தப்படும்.

தண்டனையைப் பொறுத்திருந்துப் பாருங்கள்இந்த அரசு எப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கிறது; இந்த மாநிலத்திற்காக மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இந்த வழக்கில் 'விரைந்து தண்டனைப் பெற்றுத் தருவதில்' ஒரு முன்னணி வழக்காக மட்டுமல்லாமல், இதுபோன்று தவறு செய்யக்கூடியவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்கப்போகிறது. பொறுத்திருந்துப்பாருங்கள். இதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும், இங்கே இருக்கக்கூடிய எல்லா உறுப்பினர்களுக்கும் நான் இதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.



இதையும் படிங்க: டெல்லி நிர்பயா வழக்கை மிஞ்சும் கொடூரம்: வேலூரில் மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details