சமீப காலமாக மாறிவரும் வாழ்வியல் முறை, உணவுப் பழக்கங்கள் காரணமாக இளம் வயதினர் அதிக உடல்நல பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் இயற்கை உணவுகள் பற்றியும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பாரம்பரிய பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் வீடுகளிலுள்ள முதியவர்களிடமும், இணையதளத்திலும் கேட்டும், படித்தும் தெரிந்துகொண்டு இயற்கை பொருள்களை வாங்க ஆர்வம்காட்டுகின்றனர்.
ஆனால் பல நேரங்களில் இதுபோன்ற விற்பனை செய்யப்படும் இயற்கை பொருள்கள் உண்மையிலேயே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதா, கலப்படம் இல்லாததா என்ற சந்தேகத்துடனே மக்கள் வாங்கவேண்டியுள்ளது. இயற்கை பொருள்கள் என சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் மற்ற பொருள்களைவிட பன்மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் அவற்றை வாங்கமுடியாத சூழல் நிலவிவருகிறது.
இதற்கு தீர்வாக அரசின் தர உத்தரவாதத்துடன் குறைந்த விலைக்கு பொருள்களை வாங்கும் வாய்ப்பு சென்னை மக்களுக்கு தற்போது உருவாகியுள்ளது. தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கி சார்பில், கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட பொருள்கள், கிராமப்புற இயற்கை பொருள்கள் மற்றும் கைத்தறி பொருள்களின் கண்காட்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில் நடைபெற்றது.
இதில் காஷ்மீர், வடகிழக்கு, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து செய்யப்பட்ட கைவினை கலை பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இதில் நாச்சியார்கோயில் குத்துவிளக்கு, கைத்தறி பட்டுபுடவைகள், அழகுசாதன பொருள்கள், வேலைப்பாடுகள் நிறைந்த ஜமுக்காளங்கள், பட்டு ஓவியங்கள், மதுபானி ஓவியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், இயற்கை வேளாண் பொருள்கள், மரத்தினாலான சிற்பங்கள், ஆயுர்வேத மூலிகை பொருள்கள் உள்ளிட்ட 100 மேற்பட்ட கிராம்புறத் தயாரிப்புகள் 64 ஸ்டால்களில் விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர தினை, கம்பு, சீரகசம்பா போன்றவற்றால் செய்யப்பட்டப் பாராம்பரிய உணவுகளும் விற்கப்பட்டது. சுடச்சுட பரிமாறப்பட்ட சீரகசம்பா கலவை சாதத்தை இளைஞர்கள் ஆர்வமுடம் வாங்கி ரசித்து உண்டு மகிழ்ந்தனர்.