தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வழக்கு முடித்து வைப்பு - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான பணப்பட்டுவாடா புகாரில் முகாந்திரம் இல்லை என்ற காவல்துறை விளக்கத்தை ஏற்று, இயக்குனர் கவுதமன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Dec 16, 2019, 10:57 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது அதிமுகவினரும், திமுகவினரும் கோடிக்கணக்கான ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததாக தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், இயக்குனருமான கவுதமன் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் அக்டோபர் 14ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர், காவல்துறையின் உதவியுடன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரியிருந்தார். கவுதமன் அளித்த புகாரில் சிஎஸ்ஆர் வழங்கப்பட்ட நிலையில், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுதமன் அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்டதாகவும், தேர்தல் பறக்கும் படையினர் விளக்கம் பெற்றதாகவும், ஆனால் அந்த புகாரில் முகாந்திரம் இல்லை என்ற அடிப்படையில் புகாரை முடித்து வைத்துவிட்டதாகவும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முதலமைச்சர், துணை முதலமைச்சர், திமுக தலைவர் உள்ளிட்டோர் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குனர் கவுதமன் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details