சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி, தங்கியிருந்த விடுதி மாடியிலிருந்து கீழே குதித்ததில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
தற்போது வரை மாணவியின் உயரிழப்பில் சந்தேகம் நிலவி நிலையில், ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதிவேண்டி தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று (ஜூலை 16) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் அவர் எப்படி இறந்தார் என்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக கண்டறிய வேண்டும். மேலும், மாணவியின் மரணத்திற்குக் காரணமான பள்ளி நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட அந்த தனியார் பள்ளியை இழுத்து மூட வேண்டும். மாணவி ஸ்ரீமதி போலவே ஏற்கெனவே 5-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கனியாமூர் தனியார் பள்ளியில் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாணவி ஸ்ரீமதி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு உரிய நீதி கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நீட் தேர்வு பாடங்கள் கடினம்... - கடிதம் எழுதிவிட்டு அரியலூர் மாணவி தற்கொலை