நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி என்று அழைக்கப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ள வாகன நிறுவனங்கள், அடுத்தடுத்து உற்பத்தியை குறைத்து வருகின்றன. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அஷோக் லேலாண்ட் நிறுவனம் தனது எண்ணூர் மற்றும் ஓசூர் ஆலையில் வேலையில்லாத நாட்களை அறிவித்து தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் பலரும் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாகன விற்பனை சரிவுக்கு ஓலா, ஊபர் காரணமா? - uber
சென்னை: வாகன விற்பனை சரிவுக்கு ஓலா, ஊபர் காரணமா என்பது குறித்து பொருளாதார வல்லுநர் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வாகன விற்பனை சரிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலையை ஏற்க மறுத்த அவர் தற்போது உள்ள தலைமுறையினர் புதிய கார் வாங்கிப் பயன்படுத்துவதைவிட ஓலா, ஊபர் போன்ற வாடகை கார்களில் செல்வதையே விரும்புவதாகவும், இதனால்தான் விற்பனை சரிவடைந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய பொருளாதார வல்லுநர் டி.ஆர்.அருள் ராஜன், ”வாகன விற்பனை பல மாதங்களாக தொடர்ந்து குறைந்துவருகிறது. வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவை வெறும் அந்த துறை சார்ந்ததாக மட்டும் பார்க்காமல், ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவின் அடையாளமாகவே பார்க்க வேண்டும். நாட்டின் பொருளாதார பிரச்னையை அரசு தற்போதுவரை கண்டறியவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. கன ரக வாகனங்களின் விற்பனையும் மிகப்பெரிய அளவில் சரிவடைந்துள்ளது. பெரும் நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதால் கன ரக வாகனங்களின் விற்பனை சரிவடைந்துள்ளது. இதன்மூலம் நாட்டில் நுகர்வு குறைந்துள்ளது வெளிப்படுகிறது” என்றார்.