சென்னை:விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு மற்றும் விசிக நிர்வாகிகள் இன்று (ஜூலை 6) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு, "சிதம்பரம் மக்களவை உறுப்பினரும் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் சமூக வலைதளத்தில் தொடர்ந்து இழிவாகவும், அவதூறாகவும் பதிவுகளை செய்து வருகிறார்.
சமூக பிரிவினையை உண்டாக்குகிறார்
சமூக நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கல்யாணராமன் செயல்பட்டு வருகிறார். திருமாவளவனின் குடும்பத்தினர் பற்றியும் அவர் இழிவான பதிவுகளை செய்து வருகிறார். ஏற்கனவே, கல்யாணராமன் மீது கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2 புகார்களை கொடுத்துள்ளோம்.
ஆனால் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமூக பிரிவினையை உண்டாக்குதல், ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுப்படுத்துதல், தரக்குறைவான அவதூறு செய்திகளை வெளியிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பாஜக கல்யாணராமன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.