மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பாக, மாநிலம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கந்தன்சாவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது வேளாண் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசு, அதற்கு துணை போன அதிமுக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் கண்டன உரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "23 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகள் இச்சட்டம் காரணமாக கூட்டணியில் இருந்து விலகிவிட்டன. நாடாளுமன்றத்தில் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி இந்த 3 சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் குறைந்தபட்ச ஆதார விலையை பற்றி எந்த இடத்திலும் இல்லை.
உழவர் சந்தை, நியாய விலைக்கடை ஒன்றுமில்லாமல் போகும் - வைகோ விவசாயிகள் பொருட்களை இருப்பு வைத்து, விலை உயர்ந்த பின் பொருட்களை விற்றுக் கொள்ளலாம் என அரசு கூறுகிறது. எந்த ஒரு விவசாயியும் இருப்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கு பணம் படைத்தவன் இல்லை. கடன் பெற்று விவசாயம் செய்பவன், எப்படி இருப்ப வைத்து விற்பான். இச்சட்டங்கள் மூலம் உழவர் சந்தை, நியாய விலை கடை போன்ற அமைப்புகளை ஒன்றும் இல்லாமல் ஆக்கப் போகின்றனர்.
மத்திய அரசிடம் கொத்தடிமையாக இருப்பதால், இதனை எதிர்ப்பதற்கு பதிலாக ஆதரவளிக்கிறது அதிமுக அரசு. இச்சட்டம் மூலம் பெரு வியாபாரிகள் பொருட்களை பதுக்கி வைத்துக்கொண்டு கஷ்ட காலத்தில் அதிக விலைக்கு விற்பார்கள். எனவே, பாஜக அரசு இச்சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் " எனத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: விவசாயிகளை ஏமாற்றும் விஷவாயு எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் கடும் தாக்கு