தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 26, 2022, 8:08 AM IST

ETV Bharat / city

சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து காங்கிரஸ் சட்டமன்ற சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்த கருத்துக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

சட்டப் பேரவையில் கூச்சம் குழப்பம்
சட்டப் பேரவையில் கூச்சம் குழப்பம்

சென்னை:சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல்.25) தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்த முன்வடிவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து அனைத்துக் கட்சி தலைவர்களும், மசோதா மீது தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேசினர். அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.

இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அவர் பேசியது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார். பின்னர் மீண்டும் செல்வப்பெருந்தகை பேச தொடங்கியபோது, அதிமுகவினர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக திமுக உறுப்பினர்களும் கோஷம் எழுப்பியதால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, யார் பேசியதும் அவை குறிப்பில் இடம்பெறாது, அதிமுக உறுப்பினர்கள் இருக்கையில் அமர வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது எழுந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், சபாநாயகர் 2, 3 முறை கூறிய பின்பும் அதிமுக உறுப்பினர்கள் இருக்கைக்கு செல்லாமல் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், உறுப்பினர்கள் பேசினார்களா இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை என்றும், அவர்கள் பேசிய எதுவும் அவை குறிப்பில் ஏறவில்லை என்றும், இருப்பினும் அதிமுகவினர் வெளியே செல்வதற்கு காரணத்தை தேடிக் கொண்டிருப்பதாகவும், இந்த சட்ட மசோதாவை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித்தர வேண்டும் என்றும் கூறினார்.

அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஒருவரே எழுந்து சட்டமன்ற உறுப்பினரை கண்ணியக் குறைவான வார்த்தைகளால் பேசுவது, சட்டப்பேரவை மரபுக்கு உகந்ததல்ல என்றும், இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் தெரிவித்தார்.

உடன் மீண்டும் பேசிய முதலமைச்சர், உறுப்பினர்கள் பேசியது அவைக் குறிப்பில் ஏறவில்லை என்று தானும் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும், அதிமுகவினர் என்ன காரணத்திற்காக வெளிநடப்பு செய்தார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அப்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவருடைய பெயரை அவையில் குறிப்பிட்ட போது, அப்போது பேசிய முன்னாள் சபாநாயகர் தனபால், தற்போதைய முதலமைச்சரை மட்டுமே பெயர் சொல்லி அழைக்கக்கூடாது, முன்னாள் முதலமைச்சர்களை, மாண்புமிகு என்று குறிப்பிட்டு அவர்களின் பெயரை கூறலாம் என்று கூறியிருப்பதாகவும்,தனபால் பேசியது சட்டப்பேரவை குறிப்பில் இருக்கின்றது, அதன்படியே இப்போதைய உறுப்பினர்களும் செயல்படுவதாகவும், எனவே காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை பேசியது தவறல்ல, சரியானதே என்றும் விளக்கமளித்தார்.

இதையும் படிங்க:மாநிலத்தினுடைய பல்கலைக்கழகக் கல்வியுரிமை.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details