சென்னை: கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டைத்தொடங்கி வைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது துணைவேந்தர்களிடம் பேசும்போது, "தமிழ்நாட்டில் 22 மாநிலப் பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல், பொறியியல், கல்வியியல், விளையாட்டு, கால்நடை, மருத்துவம், மீன்வளம், தமிழ்வளர்ச்சி, சட்டம், வேளாண்மை மற்றும் இசை ஆகிய துறைகளின் கீழ் திறம்பட செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களை வளர்த்தெடுக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.
மாநில அரசின் கொள்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும்:அதேநேரத்தில் மாநில அரசின் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும். பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்குத்தேவையான உதவியை வழங்க அரசு தயாராக உள்ளது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உள்ளது.
மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும். நீட் தேர்வுக்கு பயந்து அதை எதிர்க்கவில்லை; உயர் கல்விக்கு தடைக்கல்லாக இருக்கும் என்பதால் தான் அதை எதிர்க்கிறோம். புதிய தேசிய கல்விக்கொள்கையையும் அரசு எதிர்க்கிறது, புதிய பாடங்கள், படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும்.
மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள பாடங்களை கற்க வேண்டும். புதிய பாதையை அமைத்துத்தர வேண்டும். உயர்கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.3,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இதுவே பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்படக் காரணம். உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
மேலும் உயர வேண்டும்: நீதிக்கட்சி ஆட்சியில் கல்விக்காக போட்ட விதையே, இன்று கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாக காரணம். அனைவருக்கும் கல்வி, தகுதிக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல் ஆட்சி. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிக உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.