தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நீட் பாதிப்பு ஆய்வுக் குழு - வரம்பை மீறிய செயல் - Chennai High Court

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Jul 8, 2021, 8:35 PM IST

Updated : Jul 8, 2021, 9:53 PM IST

20:24 July 08

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யக் குழு அமைத்தது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 8) ஒன்றிய அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.

சென்னை: நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தற்போது இந்த வழக்கில், மத்திய சுகாதாரத் துறை சார்பு செயலாளர் சந்தன்குமார் இன்று (ஜூலை 8) பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல்

அதில், ”மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தொடர்பான சட்டம், விதிகள், அரசியல் சாசன அடிப்படை உரிமைகளை பறிப்பதாகக் கூற முடியாது. 

இந்த சட்டம் பொது நலனைக் கருத்தில் கொண்டே இயற்றப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பான சட்டங்கள் அமல்படுத்தப்படுவது சிறப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு, தனியாகக் குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நியமனம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது.

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம்

மாநில அரசு தொடர்பான விஷயங்களில் மட்டும் விசாரணை ஆணையம் அமைத்துக் கொள்ள, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்தது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் ஆகும்.

தமிழ்நாடு அரசு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்யக் குழு நியமிக்க முடியாது. நீட் தேர்வு சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது குறித்து விசாரிக்க, தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது” என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு வரும் ஜூலை 13ஆம் தேதி, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நிலுவையிலுள்ள வழக்குகளை முதன்மை அமர்வுக்கு மாற்ற ஒப்புதல் 

Last Updated : Jul 8, 2021, 9:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details