தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உரிமை கோரப்படாத சடலங்கள் விற்பனை! - அரசு தகவல் - உரிமை கோரப்படாத உடல்கள்

சென்னை: உரிமை கோரப்படாமல் உள்ள சடலங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மருத்துவ கல்லூரிகளுக்கு விற்பனைசெய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுகாதாரத் துறை அறிக்கை தாக்கல்செய்துள்ளது.

bodies
bodies

By

Published : May 30, 2020, 1:54 PM IST

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காரணங்களால் மரணமடையும் நபர்களின் உடல்கள், அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டு, 10 நாள்களுக்குப் பின் அவற்றை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி புதைக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்கள் மயானங்களில் புதைக்கப்படுவதால் இடப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும், உடல்களை நீண்ட நாள்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதன் மூலம், நோய்கள் பரவும் இடர் உள்ளதாலும் அவற்றை தகனம்செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், இதுபோன்ற உடல்களைத் தகனம்செய்ய பிற மாநில நீதிமன்றங்கள் அனுமதியளித்துள்ளதாகவும், ஆனால் இங்கு வழக்குகளைக் காரணம் காட்டி, புதைக்க மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகனம்செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட சடலங்களின் முடி, நகம் போன்றவை எடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதால், அடையாளம் காண்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது எனவும், தகனம்செய்வதால் அதிக செலவு ஏற்படாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

உரிமை கோரப்படாத சடலங்கள் விற்பனை!

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் காவல் துறை இயக்குநர், சுகாதாரத் துறை செயலர் ஆகியோர் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் 184 சடலங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளது என்றும், அத்தகைய சடலங்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் வரும் வருமானத்தில் 50 ஆயிரம் ரூபாயை அரசுக்கும், மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாயை பிணவறை மேம்பாடு, பணியாளர்கள் செலவுக்கும் ஒதுக்கப்படுவதாகவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் ராஜ்மோகன், தற்போது தமிழ்நாட்டில் இதுபோன்ற உரிமம் கோராமல் உள்ள சடலங்கள் சுமார் 2400-க்கும் மேல் உள்ளதாகவும், மாநில குற்ற ஆவணப் பிரிவில் இதற்கான முழு விவரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், அந்த அடிப்படையில் சுகாதாரத் துறை, காவல் துறை இயக்குநர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் வாதிட்டார்.

மேலும் இந்தச் சடலங்களை அடக்கம் செய்ய உரிய நடைமுறையும் இதுவரை வகுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த அறிக்கை தங்களுக்குத் திருப்தி இல்லை என்று கூறியும் மீண்டும் புதிய அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டும், வழக்கு விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அழுகிய நிலையில் முதியவர் சடலம் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details