சென்னை:நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (செப்.13) அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட சட்டப்பேரவை அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
- திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் பணிகள்,
- சென்னை, வில்லிவாக்கம், அருள்மிகு தேவிபாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்கள் சார்பாக கட்டப்படவுள்ள மூத்த குடிமக்கள் உறைவிடங்களின் பணிகள்,
- திருச்சி, குணசீலம், அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் சார்பாக நடத்தப்பட்டு வரும் மனநல காப்பகத்தினை மேம்படுத்தும் பணிகள்,
- பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சோளிங்கர், அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சார்பாக புதிதாக கட்டப்படவுள்ள மனநல காப்பகப் பணிகள்,
- பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக பழனி மலைக்கும், இடும்பன் மலைக்கும் இடையே கம்பிவட ஊர்தி அமைத்தல்,
- திருச்சி, மலைக்கோட்டை, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் பணிகள்,
- செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை, அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில், திருக்கழுக்குன்றம், அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் பணிகள்,
- கோயம்புத்தூர் மாவட்டம், அனுவாவி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் கம்பிவட ஊர்தி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.