தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கல்லூரிகளைத் திறக்க வழிகாட்டுதல் நெறிமுறை! - ugc

சென்னை: கரோனா தளர்வுகளின்படி பொது முடக்கத்துக்குப் பிறகு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.

UGC college opening guidelines
UGC college opening guidelines

By

Published : Nov 6, 2020, 12:39 AM IST

பல்கலைக்கழக மானியக் குழு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”பொது முடக்கத்துக்குப் பின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைத் திறப்பதற்காக பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல்களை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

சூழ்நிலையை பொறுத்து யுஜிசி வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கல்லூரி, பல்கலைக்கழகங்களைத் திறக்கலாம். மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட வளாகத்தில் உள்ள அனைவரும் முகக்கவசம், தகுந்த இடைவெளி, கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதேபோன்று கல்வி நிறுவனங்களை நன்கு தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கரோனாச் சூழலில் கல்வி நிறுவனங்களுக்கு வருவதற்கு மாணவர்களுக்கு சற்று தயக்கம் இருக்கலாம். இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பேராசிரியர் குழுவினர் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பாக தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவர்களின் வெப்பநிலையை சோதிக்க வேண்டும். வகுப்புகளில் 50 விழுக்காடு மாணவர்களைக் கொண்டு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். தேவைப்பட்டால் வாரத்தில் ஆறு நாள்கள் வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம்.

விடுதிகள், ஆய்வகங்கள், விளையாட்டரங்குகளில் போதுமான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மாணவர்கள், பேராசிரியர்கள் பயன்படுத்திய முகக்கவசங்களை பாதுகாப்பான முறையில் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மாணவர்கள் தங்களது உடல்நிலையில் ஏதாவது மாறுபாடு இருந்தால் அது குறித்து தங்களது பேராசிரியர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துவது அவசியம். அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களில் மாணவர்கள், பேராசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கிய கடமையாகும். இதை கருத்தில் கொண்டு உரிய வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details