திமுக இளைஞரணி, மாணவரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் இன்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, "கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வகுப்பறைச் சூழலில் இருந்து விலகி பொழுதுகளை கழித்து வரும் மாணவர்களை, வீட்டில் இருந்து நேரடியாக தேர்வு அறைக்கு அழைத்து வந்து தேர்வு எழுது என்றால் அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தையே தரும். அதேபோல், தேர்வு அறையில் உள்ள மாணவர்களில் யாராவது ஒருவருக்கு தொற்று இருந்தாலும், அது மற்ற மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் பரவும் சூழல் உள்ளது.
தகுந்த விலகலோடு தேர்வை நடத்துவோம் என்றாலும் தேர்வுக்கு முன்னும், பின்னும் கூடிப்பேசும் மனநிலை கொண்ட மாணவர்களிடையே இது எந்த அளவுக்கு கடைபிடிக்கப்படும் என்பது கேள்விக்குறிதான். அதனால் ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு, 10 முதல் 15 நாட்கள் பள்ளி இயங்கிய பிறகு பொதுத் தேர்வை நடத்துவது என்பதே சரியாக இருக்கும்.