தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குழந்தைகளின் உயிரோடு விளையாடினால், அதற்கு பழனிசாமியே பொறுப்பு - உதயநிதி

சென்னை: கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin

By

Published : Jun 8, 2020, 3:20 PM IST

தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இருப்பினும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஜூலை 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தலைவர்களும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணி செயலாளர் எழிலரசன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் அல்லது தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்த பின்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருவரும் இணைந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்ததையும் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த எதிர்ப்புகளால் தேர்வை 15 நாள்கள் தள்ளி வைத்தாலும், திடீரென்று எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் தேர்வு நடத்தும் நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர்.

தற்போது கரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்துவருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், பாதிப்பு குறைவாக இருக்கும்போது ஊரடங்கை அமல்படுத்தி, பாதிப்பு அதிகமாக இருக்கும்போது ஊரடங்கை முற்றிலுமாக தளர்த்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுமார் 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ள நிலையில், வீட்டிலிருந்து கிளம்பி தேர்வறைக்கு வரும்வரை ஏதேனும் ஒரு புள்ளியில் அவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என கேள்வி எழுப்பிய அவர்கள், இந்த நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடத்தியேதான் தீரவேண்டும் என்றால் கரோனா தாக்கம் குறையத் தொடங்கியதும், 10 முதல் 15 தினங்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி முடித்தபிறகு தேர்வை நடத்துவதே சரியான முடிவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் எதிர்காலமான அப்பாவி குழந்தைகளின் உயிரோடு விளையாடினால் அதற்கான பொறுப்பையும் எடப்பாடி பழனிசாமியே ஏற்க வேண்டியிருக்கும் என உதயநிதி ஸ்டாலின்- எழிலரசன் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் பயிலும் செவிலியர் மாணவிக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details