சென்னை: ஜாபகர்கான் பேட்டையைச் சேர்ந்த தங்கம் பழனி, துப்புரவு பணி சூப்பர்வைசராக இருந்து வருகிறார்.
இவர் சாஸ்திரி நகர், முதல் மெயின் ரோடு, 6ஆவது குறுக்குத் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியை ஆகஸ்ட் 23ஆம் தேதி சுத்தம் செய்யச் சென்றபோது பையில் எலும்புகூடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து உடனடியாக சாஸ்திரி நகர் காவல் துறையினருக்கு தங்கம்பழனி புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் சாஸ்திரி நகர் காவல் துறையினர் தலை, கால், கை என தனித்தனியாக இருந்த எலும்பு கூட்டை கைப்பற்றி தடயவியல் ஆய்வகத்திற்கும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆய்வகக் கூடத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, சந்தேக மரணம் என காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து எலும்பு கூடு ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என அறிய டி.என்.ஏ பரிசோதனைக்கும் உட்படுத்தினர். மேலும் கொலை செய்து மறைத்து வைத்து பல ஆண்டுகள் கழித்து எலும்புக்கூட்டை யாரேனும் வீசிச் சென்றனரா என்பன போன்று பல கோணங்களிலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சிசிடிவியில் காவலாளி ஒருவர் வந்து எலும்புக் கூடு பையை வீசிச் செல்வது போல் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்தக் காவலாளி சென்ற இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, காவலாளியை கண்டறிந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அந்நபர் சாஸ்திரி நகர் 6ஆவது தெருவில் காவலாளியாக பணிபுரிந்து வரக்கூடிய பார்த்தசாரதி என்பதும், வீட்டின் உரிமையாளரின் காரை சுத்தம் செய்யும்போது கிடைத்த பையை குப்பைத் தொட்டியில் போட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து வீட்டின் உரிமையாளரான சிவசுப்பிரமணியனிடம் விசாரித்தபோது, தனது நண்பரான அரவிந்த் என்பவருக்கு தனது காரை வழங்கியதாகவும், அவரது மகளான தனலட்சுமி காரை பயன்படுத்திவிட்டு 23ஆம் தேதி கொண்டு வந்து விட்டதாகவும், காரை சுத்தம் செய்த போது கிடந்த பையை குப்பை தொட்டியில் வீசுமாறு கூறியதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து தனலட்சுமியிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மருத்துவக் கல்லூரியில் தான் மருத்துவப் படிப்பு வருவதாகவும், படிப்புக்காக சுடுகாட்டில் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து எலும்புக் கூடு வாங்கியதாகவும், தேர்வு முடித்துவிட்டு காரில் தெரியாமல் எலும்புக் கூட்டை மறந்துவிட்டுச் சென்றதாகவும் கூறினார்.
இந்நிலையில், எலும்புக் கூட்டை வாங்கினார், எலும்புக் கூட்டை அவர் வாங்கியது உண்மைதானா என்பன குறித்து விசாரணை செய்ய மருத்துவ மாணவியை நேரில் வருமாறு அழைத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.