இந்தியா முழுவதும் தொழில்படிப்புகளை வழங்கிவரும் கல்வி நிறுவனங்கள், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அதன் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்வி நிறுவனங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சேர்க்கை அனுமதியை ஆண்டுதோறும் பெற வேண்டும்.
கடந்தாண்டு அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் என 577 கல்லூரிகள் இருந்தன. இவைகளுக்கான அனுமதி கொடுப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் வழங்கும் குழு ஆய்வினை மேற்கொண்டது. அப்போது 92 பொறியியல் கல்லூரிகள் போதுமான கட்டமைப்பு இல்லாமல் இருந்ததால், மாணவர் சேர்க்கை அனுமதி எண்ணிக்கை குறைத்து வழங்கப்பட்டது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. அதில் தற்போது இயங்கிவரும் 542 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டதால் நான்கு பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றிவிட்டு அந்தக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.