சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜனவரி 6) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 496 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6983 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று
தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே 71 லட்சத்து 62 ஆயிரத்து 420 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டிலிருந்த 27 லட்சத்து 67 ஆயிரத்து 432 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 22 ஆயிரத்து 828 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 721 நபர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து ஏழாயிரத்து 779 என உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் ஏழு நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் ஒன்பது நோயாளிகளும் என 16 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆகவே, இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 825ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 3,759 நபர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,691 நபர்களுக்கும் அதிக அளவில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.