சென்னை:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நேற்று (28.10.2021) மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரான சீ.சரவணன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், 1.3.2021 முதல் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருவதாகவும், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவினர் பதவி வகிப்பதாகவும் கூறியுள்ளார்.
குத்தாலம் ஊராட்சி ஒன்றிய ஆளும் திமுகவினர் முறைகேடாக அஜெண்டாவில் இல்லாத பொருட்களைத் தீர்மானத்தில் இயற்றி, டெண்டர் வைத்துத் தரச் சொல்வதாகவும், உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து எடுக்கக்கூடாது என்று விதி உள்ளதாகக் கூறியும், விதியை மீறி உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்குத் தீர்மானத்தை இயற்றி டெண்டர் விட ஒன்றியக் குழுத் தலைவர் வற்புறுத்துவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுகவின் குத்தாலம் ஒன்றியக் குழுத் தலைவர் இதுபோல் 16 வேலைகளை எழுதிக்கொடுத்து, இதில் 8 வேலைகள் செய்து முடித்துவிட்டதாகவும் , மேலும் இவை அனைத்தையும் பொது நிதியில் டெண்டர் வைக்கச் சொல்வதாகவும் , ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு அஜந்தா அளிக்கப்படாமல் தீர்மானம் இயற்றினால் செல்லாது என்ற விவரத்தினை எடுத்துச் சொல்லியும், நான் சேர்மன், எனவே, நான் சொல்லியபடி செய்து தாருங்கள் என்று கட்டாயப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈட்டா விடுப்பு வழங்கக் கோரிக்கை
அதே போல், திமுக ஒன்றியக் குழுத் தலைவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ( Target work ) வழங்கப்பட்ட நிர்வாக அனுமதியினை ஊராட்சியின் மூலமாகவே செயல்படுத்த வேண்டும். அதையும், வேலை தொடங்காமல் நிறுத்தி வைத்துள்ளார் என்றும் தனது கடிதத்தில் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
எனவே , குத்தாலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகத் தொடர்ந்து பணியாற்ற தன்னால் இயலவில்லை என்றும், தனக்கு 60 நாட்கள், ஈட்டா விடுப்பு வழங்கக் கோரியும் , மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
மேலும் அக்கடிதத்தில், குத்தாலம் வட்டாரத்தில் தொடர்ந்து பணியாற்றினால் இயற்கையாகவோ, செயற்கையாகவோ மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சரவணன் மன அழுத்தத்துடன் தனது கடிதத்தில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.