தமிழ்நாடு அரசு இன்று (மார்ச் 31) வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:
கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சூழலுக்கு ஏற்ப கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் விதித்துக் கொள்ளலாம். மத்திய உள் துறை அமைச்சகம் அனுமதித்த விமான பயணங்கள் தவிர மற்ற அனைத்து சர்வதேச விமான பயணங்களுக்கும் தடை நீடிக்கும்.
கரோனா பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை தொடரும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கனவே வகுத்து அளிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கரோனா குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா கட்டுப்பாடு பகுதிகளில் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், கரோனா தொற்று தொடர்புடைய நபர்களை 72 மணி நேரத்துக்குள் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும், கரோனா நோயாளிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கரோனா கட்டுப்பாடு பகுதிகளில் தங்குதடையின்றி வீடுகளுக்குத் தேவையான பொருள்கள் விநியோகம் செய்ய வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது.
முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் கரோனா தொற்று காரணமாகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள், வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:’ஊர்வலம் செல்வதைத் தவிருங்கள்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்