சென்னை:ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் ஒருபகுதியாக, துறையின் கீழ் இயங்கி வரும் 98 மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு பயிலும் மாணவர்களுக்காக 51 கணினி ஆய்வகங்களில் 6 மின்கலன் உடன் கூடிய இன்வெர்ட்டர்கள் ரூ. 87 லட்சம் செலவில் வாங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இந்நிலையில், இதற்கான 86 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.
இன்வெர்ட்டர் வசதி
அந்த அரசாணையில் "தமிழ்நாடு முழுவதும் ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 98 அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட 1,138 ஆதிதிராவிட நலப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், 11 மற்றும் 12ஆம் வகுப்பு கணிணி பாடப் பிரிவு மாணவ மாணவிகளுக்காக 64 ஆய்வகங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் 13 ஆய்வகங்களுக்கு ஏற்கனவே இன்வெர்ட்டர் வசதி உள்ள நிலையில், எஞ்சியுள்ள 51 கணினி ஆய்வகங்களுக்கு இன்வெர்ட்டர் வசதி இல்லாமல் இருந்து வந்தது" என்று கூறப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்துடன் ஆலோசனை
அந்தப் பள்ளிகளுக்கும் இன்வெட்டர் வசதி அமைத்து கொடுக்கும் பட்சத்தில் செய்முறை மற்றும் பிற தேர்வுகளை மாணவர்கள் சிறப்பாக கையாள முடியும். எனவே கணினி ஆய்வகங்களுக்கு இன்வெர்ட்டர் வாங்குவது தொடர்பாக எல்காட் நிறுவனத்திடம் விலைப்புள்ளி பெறப்பட்டது.
விலைப் புள்ளிகளின் படி, 6 மின் கலன்கள் உடன் கூடிய 5 கிலோ வோல்ட் ஆம்பியர் திறன் கொண்ட இன்வெர்ட்டர் ஒன்றின் விலை, ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள எஞ்சியுள்ள 51 கணினி ஆய்வகங்களுக்கும், எல்காட் மூலம் இன்வெர்ட்டர் வாங்கிட 86 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: 2020-21பங்கு ஈவுத் தொகை ரூ.155 கோடி - முதலமைச்சரிடம் வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு