சென்னை:10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வினை எவ்வித பிரச்சனைகளும் இன்றி நடத்துவதற்காக 3 ஐஏஎஸ் அலுவலர்கள், கல்வித்துறை இயக்குனர்கள் உள்ளிட்ட 37 பேரை அரசு நியமனம் செய்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், "மே மாதம் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வினை மேற்பார்வையிடுவதற்கு பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஐஏஎஸ் அலுவலர்கள், இயக்குனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் சுதன், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் மணிகண்டன், தேனி மாவட்டத்திற்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத், சென்னை மாவட்டத்திற்கு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி ,காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளி கூடுதல் திட்ட இயக்குநர் ராமேஸ்வர முருகன், திருச்சி மாவட்டத்திற்கு தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகத்தின் செயலாளர் கண்ணப்பன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேர்வினை எந்தவித பிரச்சனையுமின்றி நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 10,663 குழந்தைகளுக்கு நிதியுதவி