சென்னை:ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலேயர்களிடம் இருந்து நமது இந்திய நாடு சுதந்திரம் பெற்ற நாளான ஆக.15 ஆம் நாள் நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழுள்ள முப்படைகளின் அணிவகுப்பும் வண்ணமையமாக தலைநகர் டெல்லியிலுள்ள செங்கோட்டையில் நடத்தப்படும். தவிர நாடெங்கும் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு துறை நிறுவனங்கள், நாட்டின் விடுதலைப் போர் நினைவிடங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நாட்டின் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்யப்படும். அதன்படி, இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழா வரும் ஆக.15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி, சமூக ஊடகங்களில் ஆக.2 ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை அனைவரும் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்கவேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். தனது முகப்புப் பக்கத்தையும் நாட்டின் தேசியக் கொடியாக அவர் மாற்றினார். இதேபோல், ஆக.13 முதல் 15ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். தேசியக் கொடிக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனையும் நடைபெற்று வருகிறது.