முதலமைச்சர் பழனிசாமியின் டெல்லி பயணத்தில் முக்கியமாக ஒரு விஷயம் பேசப்பட்டிருக்கும் என, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதை அடியோடு மறுத்திருக்கிறார் அவர். அடுத்த வாரம் சிறையிலிருந்து வெளிவர உள்ள சசிகலா விவகாரம்தான் அது. இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பிலை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
முதலமைச்சரின் இரண்டு நாள் பயணத்திட்டத்தில் நேற்றிரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், இன்று காலை பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினார். அப்போது அரசின் புதிய திட்டங்களை துவக்கி வைக்க வருமாறும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் அவர் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடம் முதலமைச்சர் சந்திப்பு ஆனால், முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர், தமிழகம் வந்து பிரச்சாரம் மேற்கொள்ளவும், சசிகலா விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை விளக்கவுமே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 38 தொகுதிகள் கேட்பதாக தகவல் வெளியான நிலையில், தொகுதிப் பங்கீடும் அமித்ஷாவுடனான சந்திப்பில் பேசி முடிக்கப்பட்டு விட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதலமைச்சர் சந்திப்பு இதனிடையே, பிரதமர், முதலமைச்சர் ஆகியோருடனான சந்திப்பிற்கு துணை முதலமைச்சரான ஓபிஎஸ்-சை, இபிஎஸ் அழைத்துச் செல்லாததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு முன்னர் அப்படி நடக்கவில்லை என்றாலும், தேர்தல் நேரமான தற்போது இருவரும் ஒன்றாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் வேளையில், அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் முதலமைச்சருடன் சென்றிருப்பது புகைச்சலை அதிகப்படுத்தியிருக்கிறது.
இது குறித்து பேசிய மூத்தப் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், ”முதலமைச்சரின் டெல்லி பயணத்தில் நிச்சயமாக அரசியல் இருக்கிறது. சசிகலா வரவுள்ள நிலையில் தனது நிலைப்பாடு குறித்தும் அவர் தெளிவாக எடுத்து கூறியிருக்கிறார். வெளியில் கட்டுக்கோப்பாக காட்டிக்கொண்டாலும் ஓபிஎஸ்-ன் கூற்றுபடியே, கட்சியில் உள்ள அண்ணன் தம்பி பிரச்சனை குறித்தும் கட்டாயமாக முதலமைச்சர் பேசியிருப்பார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் 22 ஆம் தேதி தலைமைச் செயலகத்திற்கு வருமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் உத்தரவு பறந்திருக்கிறது. இது ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா குறித்த ஆலோசனைக்காக என்று கூறப்பட்டாலும், நடப்பவை வேறுமாதிரியாக தெரிகின்றன. ’இன்னும் நான்கு மாதமல்ல, சசிகலா வந்தவுடனேயே இந்த ஆட்சி இல்லாமல் போய்விடும்’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், சசிகலா வெளியே வரவுள்ள அதே 27 ஆம் தேதியில் ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சியும் நடக்கவிருப்பது, பல்வேறு புதிய அரசியல் அதிர்வுகளுக்கு அச்சாரமிட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை-சேலம் இரவு நேர விமானம்! - பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்!