தோரணம்:
கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தொகுதிகள் மறுசீரமைப்பின் படி, நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியின் சில பகுதிகளையும், வில்லிவாக்கம் தொகுதியின் சில பகுதிகளையும் இணைத்து புதியதாக உதயமானத் தொகுதி கொளத்தூர். அதன் பிறகு இங்கு நடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினே வெற்றி பெற்றுள்ளார். தற்போது மூன்றாவது முறையாகவும், அதே தொகுதியில் போட்டியிட இருக்கிறார். சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் முதலமைச்சர் வேட்பாளருமான ஸ்டாலின் போட்டியிட இருப்பதால் நட்சத்திர அந்தஸ்தைப் பெறுகிறது கொளத்தூர்.
களம்:
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, கொளத்தூரில் போட்டியிட மனு தாக்கல் செய்த ஸ்டாலின் தொகுதி மக்களிடம் பேசிய போது, கொளத்தூர் என் தாய் வீடு, மீண்டும் நான் என் தாய் வீட்டில் போட்டியிட வந்திருக்கிறேன் என்றார். அதேபோல தொகுதி குறித்து பேசும் போது, " தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொகுதி கொளத்தூர். ஆனால் தமிழ்நாட்டிற்கே முன்மாதிரியாக விளங்குகிறது. நாம் செய்யும் நலத்திட்டங்களைப் பார்த்து தான் மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள் அந்த அளவிற்கு நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறோம் என்றார்.
தேர்தல் உலா-2021: நட்சத்திரத் தொகுதிகள் - கொளத்தூர் மு.க.ஸ்டாலின், கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை ஆயிரம் விளக்குத் தொகுதியில் வெற்றி பெற்று வந்தார். பின்னர் நடைபெற்ற 2011ஆம் ஆண்டு தேர்தலில் கொளத்தூரில் போட்டியிட்டு, அதிமுகவின் சைதை துரைசாமியைத் தோற்கடித்தார். அடுத்து வந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகரை தோற்கடித்தார். இப்போது மூன்றாவது முறையாக மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் ஸ்டாலின்.
இந்த முறை அவரை எதிர்த்து களம் காணப்போவது யார் என்று தெரியாத நிலையில், '2021 தேர்தலில் ஸ்டாலின் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து அதே தொகுதியில் நான் போட்டியிடுவேன்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், அதிமுக கொடுத்த 'டஃபை' நாம் தமிழர் கட்சியால் கொடுக்க முடியாது என்றாலும், வாக்கு விகிதங்களில் வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்.
அதிமுகவில் கூட்டணியில், வடசென்னையின் இந்தத் தொகுதி பாஜகவுக்கு கொடுக்கப்படலாம் என்ற தகவல்களும் உள்ளன. பாஜக வசம் கொளத்தூர் தொகுதி செல்லும் பட்சத்தில், அவரை எதித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் போட்டியிடலாம் என, அரசியல் வட்டாரங்களில் பேசும்பொருளாகியுள்ளது. விடைகள் சில நாட்களில் தெரிந்து விடும்.
நிலவரம்:
சென்னை மாநகராட்சியின் 50 முதல் 54, 62 ஆவது வார்டுகளை உள்ளடக்கியது கொளத்தூர் தொகுதி. வடசென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் கரோனா பெருந்தொற்று பாதிப்பால் பல நிறுவனங்கள் முடக்கம் அடைந்துள்ளதால், வேலைவாய்ப்புகள் குறைந்திருப்பதாகத் தொகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். அதே போல தொகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சாலைகள் மேம்படுத்தப்பட்டு, விரிவாக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவேண்டும் என்ற கோரிக்கைப் பிரதானமாக முன்வைக்கப்படுகின்றது.
சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரைகள், கூட்டங்கள் என கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தனது தாய்வீடு என்று சொன்னதற்கேற்ப, கட்சி, தேர்தல் பணிகளுக்கிடையில், மறக்காமல் மாதமிருமுறை தொகுதிக்கு விசிட் அடித்து வருகிறார். மழைவெள்ளம், கரோனா போன்ற பேரிடர் காலங்களில், மக்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகள் செய்து தந்து தொகுதிவாசிகளின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்.
தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர், எதிர் கட்சித் தலைவராக ஸ்டாலினின் இந்த செயல்பாடு அவரது வெற்றியை உறுதிப்படுத்தும் என்றாலும், அவரை எதிர்த்து களம் காணப் போகிறவர்களைப் பொறுத்து வெற்றிக் கனி எளிமையாகக் கிடைக்குமா, அதனைப் போராடிப் பெற வேண்டுமா என தேர்தலின் போது தெரியவரும்.