சென்னை:சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் உள்ள மண்டபத்தில் வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கியது.
முதன்முறையாக அமைச்சராகியுள்ள (நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை (காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கை) தாக்கல் செய்தார்.
இதையடுத்து, ஆகஸ்ட் 14ஆம் தேதி முதன்முறையாக வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அன்றைய தினமே, நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் தொடங்கியது.
அலுவல் கூட்டம்
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கத்தில், சட்டப்பேரவை அலுவல் கூட்டம் இன்று (ஆக.17) நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திமுக கொறாடா கோவி.செழியன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை எதிர்க்கட்சி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக கொறாடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிதிநிலை கூட்டத்தொடர் செப்டம்பர் 21ஆம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஒரு வாரத்திற்கு முன்னரே அதாவது செப்டம்பர் 13ஆம் தேதி கூட்டத்தொடரை முடித்துக்கொள்வது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவைத் தேர்தல் அலுவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு இடத்திற்கு தேர்தல்
தமிழ்நாட்டில் செப்டம்பர் 13ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜான் மறைவைத் தொடர்ந்து அந்த மாநிலங்களவை இடம் காலியானது.
அந்த இடத்தினை நிரப்பும்விதமாக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூன்று இடங்களில் ஒரே ஒரு இடத்திற்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது ஜான் கடந்த மார்ச் 23ஆம் தேதி மறைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
திமுக கோரிக்கை
முன்னதாக திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. அதில்,
- சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக முகமது ஜான் மறைந்ததால் அந்த இடத்திற்கான தேர்தலைத் தனியாகவும், தேர்தலுக்குப் பின்னர் தங்களது எம்பி பதவியை கே.பி. முனுசாமியும், வைத்திலிங்கமும் ராஜினாமா செய்ததால் அந்த இரு இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலைத் தனியாகவும் நடத்த வேண்டும் என்பதே.
தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பின் மூலம் இது திமுகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. தனது கோரிக்கை மூலம் திமுக ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்துள்ளது என்றேதான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால், மூன்று இடங்களுக்கும் தேர்தலை நடத்துவதாக இருந்திருந்தால் திமுகவுக்கு இரண்டு எம்பி சீட்டுகளும், அதிமுகவுக்கு ஒரு எம்பி சீட்டும் கிடைத்திருக்கும். அதனைத் தவிர்ப்பதற்கான ஸ்டாலினின் உத்தியே தற்போது வெற்றி பெற்றிருக்கிறது.
இதையும் படிங்க: அர்ச்சகர்களை பணியிடை நீக்கம் செய்யவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்