பாஜக சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரைக்கு டிஜிபி அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி தமிழக பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொது அமைதி சம்பந்தப்பட்டுள்ளதால் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை பாஜக தீர்மானிக்க முடியாது என்றும், பொறுப்போடு நடந்து கொள்ளவும் பாஜகவுக்கு அறிவுறுத்தியிருந்தது. மேலும், உரிய விவரங்களுடன் புதிய விண்ணப்பத்தை டிஜிபிக்கு அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ” தடையை மீறி நவம்பர் 6, 8, 9 தேதிகளில் பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் கோயம்பேட்டிலிருந்து கிளம்பி பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதும் பயணித்து ராயபுரம், திருவொற்றியூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் வரை யாத்திரை சென்றுள்ளனர். அதில் மனுதாரர் கரு.நாகராஜன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த மூன்று நாட்களில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்ட நிலையில், ஒருவர் கூட தனி மனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை, கட்சித் தலைவர் எல்.முருகன் மற்றும் யாத்திரையில் கலந்து கொண்ட ஒருவரும் முகக்கவசம் அணியவில்லை. தடையை மீறி ஊர்வலம் சென்றது தொடர்பாகவும் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
பாஜகவினர் காவல்துறையிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். அதனால், காவல்துறையால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. 10கி.மீ.க்கும் குறைவான வேகத்தில் வாகனங்கள் பேரணியாக சென்றதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, ” வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக நடத்துவது கோயில் யாத்திரை அல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையாகத்தான் இருந்தது. மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வோம் என நீதிமன்றத்தில் கூறிவிட்டு, இரட்டை நிலைபாட்டை கடைபிடிக்கிறது. கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், நவம்பர் 30 வரை யாத்திரைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு தனிநபராக செல்ல எந்த தடையும் இல்லை “ என்றார்.