சென்னை:சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் மெரினா காவல் நிலைய காவல் துறையினருக்கு மெரினா கடற்கரையில் சிலர் சாராயம் விற்பதாக ரகசியத்தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது மெரினா கடற்கரையிலுள்ள கண்ணகி சிலை பின்புறம் மூன்று பெண்கள் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.