சென்னை: வேளச்சேரி கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் சிவராமன் (65). இவர் கீழ்கட்டளையில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகன் கார்த்திக் உடன் காரில் புழுதிவாக்கம் பறக்கும் ரெயில்வே நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது மற்றொரு காரில் வந்த 6 பேர் திடீரென சிவராமனை வலுக்கட்டாயமாக தங்களுடைய காரில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதைக் கண்ட கார்த்திக் ஆதம்பாக்கம் காவல் நிலையததில் புகார் செய்தார்.
பரங்கிமலை காவல் துனை ஆனையர் அருண் பாலகோபாலன் உத்தரவின் மடிப்பாக்கம் காவல் உதவி ஆனையர் பிராங்க் டி ரூபன், ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் வளர்மதி, உதவி ஆய்வாளர் திருமால் உள்ளிட்ட காவல் துறையினர் கொண்ட தனிப்படை அவரை தீவிரமாக தேடிவந்தனர்.
லட்சக்கணக்கில் பணம் ஏமாற்றம்
அப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே கடத்தப்பட்ட நபர் இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவராமனை மீட்டனர். அங்கிருந்த பெண் உள்பட மூவரை பிடித்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மதுரையைச் சேர்ந்த சிவராமன், அவரது தம்பி ஆகியோர் கடந்த 2018ஆம் ஆண்டு ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக விருதுநகர், திருத்தணி உள்பட பல இடங்களில் லட்சக்கணக்கில் பணத்தை பெற்று வேலையும் வாங்கித் தராமலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து சென்னைக்கு வந்ததுள்ளனர்.
விருதுநகரைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் தனது மனைவி லட்சுமிக்கு ரெயில்வேயில் வேலை வாங்கித் தர 12 லட்சம் ரூபாய் வரை தந்ததாகவும், திருத்தணியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் 9 லட்சம் ரூபாய் வரை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இழந்த பணத்தை மீட்க கடத்தல்
இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல் துறையினரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், செய்வதறியாது இருந்த அவர்களுக்கு சிவராமன் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை வந்த மூவரும் சிவராமனை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதனால், தாங்கள் இழந்த பணத்தை மீட்க முடியும் என நினைத்து காரில் அவரை அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து சிவராமனை கடத்தியதாக ராதாகிருஷ்ணன் (50), அவரது மனைவி லட்சுமி (39), கிருஷ்ணன் (33) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தொழிலதிபரை கடத்த முயன்ற வழக்கு - ஒருவர் கைது!