சென்னை: துபாயிலிருந்து இன்று (செப்.2) சென்னை வந்தஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரஹீம் அப்துல் ஹமீது(32), ஆலந்தூரைச் சேர்ந்த முகமது ஆசிப்(27) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்த சுங்கத்துறையினர் அவர்களின் உள்ளாடைகளுக்குள் இருந்த தங்கப்பசைகள், சிறிய தங்கத்துண்டுகள் மற்றும் தங்கச்செயின்கள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இவ்வாறாக அவா்களிடமிருந்து ரூ.60 லட்சம் மதிப்புடைய, மொத்தம் 1.281 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும் அவர்களிடம் சோதனை நடத்தியதில் ரூ.5 லட்சம் மதிப்புடைய லேப்டாப் உட்பட மின்னணு சாதனங்கள் பலவற்றையும் சுங்க அலுவலர்கள் பறிமுதல் செய்து, அந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளையில், இலங்கையின் தலைநகர் கொழும்புவிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இலங்கையைச் சேர்ந்த தங்கராஜா(32) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்த சுங்கத்துறை அலுவலர்கள் அவரிடமிருந்த 1706 கேரட் ரத்தினக்கற்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ.23 லட்சம் ஆகும். இதையடுத்து அவரைக்கைது செய்த சுங்க அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் துபாய், இலங்கையிலிருந்து வந்த 2 விமானங்களில் ரூ.88 லட்சம் மதிப்புடைய தங்கம், ரத்தினக்கற்கள், மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கை, சென்னையைச் சேர்ந்த 3 பயணிகளை சுங்கத்துறையினர் கைது செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் பிரசாந்த் மீது சுவிட்சர்லாந்த் விமான நிலைய பெண் ஊழியர் பணமோசடிப் புகார்