இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமத்துவப் பெரியார் கருணாநிதி அவர்களது 98ஆவது பிறந்த நாளில் அவர் தமிழ்ச் சமூகத்துக்கு ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளைப் பெருமையோடு நினைவு கூர்கிறோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு இந்நாளில் எமது வணக்கத்தைச் செலுத்துகிறோம். தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் எண்ணற்ற நன்மைகளைச் செய்தவர் சமத்துவப் பெரியார் கருணாநிதி.
திமுகவின் தலைவராக, முதலமைச்சராக, எழுத்தாளராக, பத்திரிக்கையாளராக அவர் ஆற்றிய பணிகள் யாவும் நினைக்கும் போதெல்லாம் வியக்க வைப்பவை. பல்வேறு தளங்களில் அவர் தனது தனித்துவமான முத்திரையைப் பதித்திருக்கிறார் என்றாலும் இந்திய அளவில் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது அவரது முதன்மையான சாதனை என்பதை எவரும் மறுக்க முடியாது.
மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றிய முதல் முதலமைச்சர்
இந்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம் 11 ல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு மாறாக ஒன்றிய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கத் தொடங்கியது. எனினும், அதற்கு எதிரான குரல்கள் 1960களிலேயே ஒலிக்கத் தொடங்கியதால், 'மத்திய-மாநில உறவுகளை' ஆய்வு செய்வதற்காக 'நிர்வாக சீர்திருத்த ஆணையத்தை' (1966) மத்திய அரசு அமைத்தது. அந்த ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. ஆனால் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் செயல்பாட்டில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி மன நிறைவு கொள்ளவில்லை.
இந்தியாவில் வேறு எந்த மாநில முதலமைச்சரும் செய்யத் துணியாத ஒன்றை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி செய்தார். மத்திய மாநில உறவுகளை ஆராய 1969ஆம் ஆண்டு நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையத்தை அவர் அமைத்தார். அந்த ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநில சுயாட்சிக்கான தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாடு அரசு இயற்றிய மாநில சுயாட்சி தீர்மானம் இந்தியா முழுவதும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.
மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடி