சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல்(ஆக. 23) திரையரங்குகள் திறக்கப்படுகிறது. இதனையொட்டி திரையரங்குகளில் தூய்மைப்படுத்தும் பணியும் தற்போது நடந்து வருகிறது.
கரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று (ஆக. 21) தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.
தமிழ்நாடு அரசு அனுமதி
அதில், 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்ரமணியம் பேட்டி அளித்துள்ளார்.
50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அதில், ''தமிழ்நாட்டில் 1,100 திரையரங்குகள் உள்ளன. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 168 திரையரங்குகள் உள்ளன.
தற்போது கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில், திரையரங்குகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
மக்களுக்கு நம்பிக்கை வரும்
அரசின் வழிகாட்டுதலின்படி 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகளை செயல்படுத்தவுள்ளோம். திரையரங்கப் பணியாளர்களுக்கு ஏற்கெனவே நாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துவிட்டோம்.
அரசின் சிறப்பு முகாம்கள் மூலமாகவும், தனியார் மருத்துவமனைகளில் எங்களது செலவிலும் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.
தடுப்பூசி செலுத்திய பணியாளர்கள் அனைவரும் 'நான் தடுப்பூசி செலுத்தி விட்டேன்' என்பதை அறிவிக்கும் விதமாக 'பேட்ச்' ஒன்றை அணிந்துகொள்ளும் வகையில், திட்டம் ஒன்றைச் செயல்படுத்தவுள்ளோம்.
அப்போதுதான் திரையரங்குக்கு வரும் மக்களுக்கு நம்பிக்கை வரும்'' என்றார்.
50 விழுக்காடுவரை..
மேலும் அவர், ''தற்போதைய சூழலில் தமிழில் 'அரண்மனை - 3', 'சிவகுமாரின் சபதம்', 'லாபம்' உள்ளிட்ட திரைப்படங்களும், இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடித்த 'பெல் பாட்டம்', 'கான்ஜுரிங் - 3' உள்ளிட்ட சில திரைப்படங்களும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.
மேலும், அடுத்தடுத்து சில திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன. சமூகத்தில் இயல்பு வாழ்க்கை என்பது தற்போது திரும்பிக் கொண்டிருக்கிறது.
பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஹோட்டல்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டன.
இதனால் பொதுமக்களும், திரையரங்குகளுக்கு இயல்பாக வரத் தொடங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
’திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை’ வாரத்தில் சனி, ஞாயிறு தவிர்த்து பிற நாள்களில் திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் 40 விழுக்காடு முதல் 50 விழுக்காடுவரை மட்டுமே இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை
மக்கள் வழக்கம்போல் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கும்போது, திரையரங்குகளில் இயல்புநிலை திரும்பும். இரண்டு வாரங்களில் அத்தகைய நிலை ஏற்படும் என நம்புகிறோம்.
அதற்காக திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. ஏற்கெனவே இருந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். கரோனா தொற்று மேலும் குறையும்போது விரைவில் 100 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
இதையும் படிங்க: 'திரையரங்குகள் திறப்பு - வரிசையாக வெளியீட்டுக்கு தயாராகும் படங்கள்'