சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமைத் தடுப்புக் குறித்து மாநில அளவிலான 2 வது கூட்டம் வரும் 12 ந் தேதி நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள தகவலில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016, விதி 16 மற்றும் திருத்த விதிகள் 2018-இன்படி, முதலமைச்சரை தலைவராக கொண்டு இயங்கும் துறை மூலம் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இதனடிப்படையில் முதலமைச்சர் தலைமையில் நிதித்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோருடன் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை, மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் 19.8.2021 அன்று முதல் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அதன் அடுத்த கூட்டம் ஏப்ரல் 12ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10ஆவது தளத்தில் உள்ளக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.