தமிழ்நாட்டில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. உள்ளாட்சி அமைப்பில் கிராமசபையின் பங்கு முக்கியமானது. தமிழ்நாடு அரசுக்கு சட்டமன்றம் எப்படியோ, அப்படி ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம சபை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட ஊராட்சியின் மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் ஊராட்சி மன்ற கூட்டம் என்றால் மக்களால் நடத்தப்படும் கூட்டம் கிராம சபைக் கூட்டம். இந்த கூட்டமானது வருடத்திற்கு நான்கு நாட்கள் நடைபெறும்.
கூட்டம் நடைபெறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு அதுகுறித்த அறிவிப்பையும், அதில் விவாதிக்கப்படவுள்ள சாராம்சத்தையும் கிராம மக்களுக்கு ஊராட்சித் தலைவரோ இல்லை ஊராட்சி எழுத்தரோ அறிவிக்க வேண்டும். அப்படி, கிராம சபையைக் கூட்ட ஊராட்சித் தலைவர் மறுத்தால், தங்களுக்கு என ஒரு தலைவரை மக்கள் நியமித்து சிறப்பு கிராம சபையைக் கூட்டலாம். இந்த சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை அவர்கள் வைக்க வேண்டும்.
கிராம சபைக் கூட்டத்தில் தங்களது ஊராட்சியின் நலன் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். முக்கியமாக இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் மக்களால் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுபவை. இதனால், இதில் பெரும்பாலான மக்களும், இளைஞர்களும் கலந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் தங்களின் தேவைகள் என்ன, எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பதை உண்மையாக உணர முடியும்.
தீர்மானங்களை நிறைவேற்றுவது மட்டுமின்றி அந்தத் தீர்மானங்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோரிக்கையாக அனுப்ப வேண்டும். அந்த கோரிக்கைகள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்படி எடுக்கப்படவில்லை என்றால் மக்கள் அனைவரும் இணைந்து ஜனநாயக முறைப்படி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும்.