சென்னை:இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் , குறிப்பிட்ட ஒரு நாள் பதிவான அதிகபட்ச பயன்பாட்டு எண்ணிக்கையை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி அன்று 1 லட்சத்து 35 ஆயிரத்து 977 பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர். மெட்ரோ ரயில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க ஃயூஆர் டிக்கெட் பதிவு முறையில் 20 விழுக்காடு தள்ளுபடியும் மெட்ரோ அட்டை வைத்து பயணிப்போருக்கு கூடுதலாக 20 விழுக்காடு தள்ளுபடியையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கியது.
அதன் விளைவாக மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 252 பேரும், மார்ச் 28ஆம் தேதி 2 லட்சத்து 10 ஆயிரத்து 634 பேரும், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 475 பேரும், மே மாதம் 26ஆம் தேதி ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 720 பேரும், ஜூன் மாதம் 3ஆம் தேதி 2 லட்சத்து 2ஆயிரத்து 456 பேரும், ஜூலை மாதம் 27ஆம் தேதி ஒரு லட்சத்து 97ஆயிரத்து 307 பேரும், ஆகஸ்ட் 29ஆம் தேதி 2 லட்சத்து 20 ஆயிரத்து 898 பேரும் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.
இது அந்தந்த மாதங்களின் உச்சபட்ச பயன்பாடு ஆகும். இவற்றை விட நேற்று, அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி 2 லட்சத்து 30 ஆயிரத்து 611 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 21 ஆயிரத்து 419 பேரும், திருமங்கலம் மெட்ரோ நிலையத்திற்கு 11 ஆயிரத்து 189 பேரும், கிண்டி மெட்ரோ நிலையத்திற்கு 10 ஆயிரத்து 599 பேரும், விமான நிலைய மெட்ரோ நிலையத்திற்கு 10 ஆயிரத்து 289 பேரும் பயணம் செய்துள்ளனர். எனவே, தங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சென்னைவாசிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 100 யூனிட் இலவச மின்சாரத்தை 200 யூனிட் வரை நீட்டிக்க வேண்டும்... சமூக ஆர்வலர்கள் கோரிக்கை