சென்னை: செங்குன்றம் எடப்பாளையம் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் அறுப்பு சீனிவாசன் என்ற சீனிவாசன் (35). மதுரவாயலில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சீனிவாசனை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி மதியம் சீனிவாசனின் மனைவி ஜான்சிராணி புழல் சிறைக்குச் சென்று, அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
அதன்பின் வீட்டிற்கு வந்த 2 மணி நேரத்திற்கு மேல் ஜான்சிராணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் சீனிவாசன் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜான்சிராணி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவரது கணவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மறு உடற்கூராய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு
இதனையடுத்து தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தன்னுடைய தரப்பு மருத்துவர் முன்னிலையிலேயே உடற்கூராய்வு நடக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.