நீட் தேர்வில் 27 மதிப்பெண் மட்டுமே பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தீக்ஷா என்னும் மாணவி 610 மதிப்பெண்கள் பெற்ற ஹிரித்திகா என்னும் மாணவியின் மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பித்து மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் மருத்துவக் கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த மாணவி தீக்ஷா, அவரது தந்தை மருத்துவர் பாலச்சந்திரன் ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று (டிச. 15) காவல் நிலையத்தில் முன்னிலையாகி விசாரணைக்குள்பட வேண்டுமென இருவருக்கும் காவல் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
ஆனால், இருவரும் விசாரணைக்கு காவல் நிலையத்தில் இதுவரை முன்னிலையாகவில்லை. மேலும் முன்னிலையாவது குறித்து எந்தவிதத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வருகின்ற டிச. 18ஆம் தேதி மாணவி தீக்ஷா, அவரது தந்தை பாலச்சந்திரன் ஆகியோர் பெரியமேடு காவல் நிலையத்தில் முன்னிலையாக வேண்டுமென கூறி காவல் துறை சார்பில் இரண்டாவது அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.