தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

என் குறித்த பொய் பதிவை நீக்குக - தங்கர் பச்சான் கோரிக்கை - மின்துறை அமைச்சர்

சட்டப்பேரவையில், என் மீதான பொய்யான பதிவை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு இயக்குனர் தங்கர் பச்சான் அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

thankar-bachan
thankar-bachan

By

Published : Aug 18, 2021, 9:54 PM IST

சென்னை:இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நிகழ்ந்த கேள்விக்கான பதிலுரையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி என் கோரிக்கை குறித்தும் பதிலளித்துள்ளார். அதில், என் குறித்த அவருடைய பதில் மிகவும் தவறானது என்பதை தெரிவித்து, அதற்கான விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி முதலமைச்சருக்கு ஒரு குடிமகனாக, எனது கோரிக்கையை ஊடகங்களின் வாயிலாக அளித்திருந்தேன். எனது செய்தி வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே மின்துறை அமைச்சர் என்னிடம் பேசச்சொன்னதாக மின்துறை அலுவலர் ஒருவர், எனது கைப்பேசிக்கு தொடர்புகொண்டு உடனே நேரில் வந்து சந்தித்து விளக்கமளிப்பதாகக் கூறினார்.

மாதாந்திர மின்கட்டண முறை

நேரில் வந்து விளக்கம் அளிக்கக்கூடிய கோரிக்கை என்னுடையது அல்ல. திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்த, 'மாதாந்திர மின்கட்டண முறை' குறித்தது தான் என்னுடைய கேள்வி எனத் தெரிவித்துவிட்டேன்.

தங்கர் பச்சான்

அவ்வாறு கூறிய பிறகும் இரண்டுமுறை தனித்தனியாக அலுவலர்கள் மின்கணக்கை சரிபார்த்து விளக்கமளிக்க என் வீட்டிற்கு வந்தனர்.

மேலும் விளக்கினேன். அதனைப் புரிந்துகொண்ட அலுவலர்கள் கட்டணம் குறித்த விவரங்கள் அடங்கிய தாள் ஒன்றினை என் கையில் கொடுத்து அதனைப் படமாக எடுத்துச் சென்றனர்.

அமைச்சருக்கு செய்தி சேரவில்லை

அந்தப்படம் சமூக வலைதளங்களில் செய்தியுடன் வெளியாகின. அதன் பிறகும் மின்துறை அமைச்சர் அவருடைய ட்விட்டர் வலைதளத்தில் எனது மின்கணக்கு குறித்து விளக்கம் அளித்து விட்டதாக வெளியிட்டிருந்தார்.

அன்று மாலையே என்னைச் சந்தித்த அலுவலர்கள், என்னுடன் எடுத்துக்கொண்ட படத்துடன் செய்தி ஒன்றினை வெளியிட்டனர். அச்செய்தியில் நான் கூறியபடியே 'எனக்கு விளக்கம் தேவையில்லை, கட்டணமுறை மாற்றம் தான் தேவை' என்பதை தெளிவுடன் குறிப்பிட்டு வெளியிட்டிருந்தனர்.

செந்தில் பாலாஜி ட்வீட்

இச்செய்தி மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்று சேரவில்லை என்பதை இன்று ஊடகச்செய்தியாக பார்த்த பின்பே தெரிந்துகொண்டேன்.

சட்டப்பேரவையில் தவறான தகவல்

நேற்று சட்டப்பேரவையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமாரின் மின்துறை குறித்த கேள்விக்கு மின்துறை அமைச்சர் பதிலளிக்கும்போது, சமூக வலைதளங்களில் மின் கணக்கீட்டில் குளறுபடி உள்ளதாக நான் புகார் தெரிவித்ததாகவும்,

அதற்கு உடனே அலுவலர்கள் விளக்கமளித்து விட்டதாகவும் அதன் பின் நான் 'வருந்துகிறேன்' எனக் கூறிவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவே, இவ்வாறான தவறான செய்திகளை நான் வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். எனது வேண்டுகோளை புகார் எனக்கூறியதுடன், அலுவலர்கள் விளக்கமளித்தவுடன் வருந்துகிறேன் எனக்கூறியதாகவும் தவறான தகவலை சட்டப்பேரவையில், பதிவு செய்துள்ளதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

அமைச்சருக்கு எழுதித்தந்த அலுவலர்கள் தான், இந்த தவறான பொய்யான செய்தியை அமைச்சர் அவர்களுக்கு தந்தார்களா? எதனால் என்னுடைய கோரிக்கை இறுதிவரை புரிந்துகொள்ள முடியாமல் போனது என்பதையும் அமைச்சர் தெரியப்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை

அமைச்சர் இப்போதாவது நான் விளக்கம் கேட்டு வருத்தம் தெரிவிக்கவில்லை எனும் உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் இவ்வளவு காலம் என்னுடைய கோரிக்கை அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் எட்டாமல் இருந்தால் இப்பொழுதாவது ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மின்கட்டணம் மாதந்தோறும் கணக்கெடுக்கப்பட்டிருந்தால், நான் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களும் பல மடங்குத் தொகையை மின்கட்டணமாக செலுத்த வேண்டியிருந்திருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பொய்யான பதிவை நீக்கவேண்டும்

மீண்டும் ஒரு குடிமகனாக முதலமைச்சருக்கும், மின்துறை அமைச்சருக்கும், 'இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல; கரோனா பெருந்தொற்றில் வேலையிழந்து, தொழிலை இழந்து வருமானமின்றி பள்ளி, கல்லூரிகளில் தங்களின் பிள்ளைகளைப் படிக்க வைக்க தவித்துக்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை' என்பதையும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

அத்துடன் சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இடம்பெற்றுவிட்ட என் குறித்த தவறான, பொய்யான பதிவை நீக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். அதற்கான நடவடிக்கை எடுக்கக்கோரி இதையே சட்டப்பேரவை சபாநாயகருக்கும் எனது கோரிக்கையாக அளிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவுக்கு ரஜினி எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும்- தங்கர் பச்சான்

ABOUT THE AUTHOR

...view details