அதிமுக எம்எல்ஏக்களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய மூன்று பேரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு கொறடா ராஜேந்திரன், மூன்று பேர் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்தார். எனவே அவர்களுக்கு சபாநாயகர் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நோட்டீஸ் எதுவும் அனுப்பபடவில்லை.
அதிமுக எம்எல்ஏக்கள் மீது அரசு கொறடா புகார்
சென்னை: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் மீது அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகர் தனபாலை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்த சூழலில் ரத்தின சபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோருக்கு இன்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்புவார் என தகவல் வெளியானது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கொறடா ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது ஆதாரத்துடன் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளேன் என்றார். மேலும், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மீது புகார் அளிக்கவில்லை எனவும் அவர் கூறினார். அரசுக் கொறடா புகார் அளித்ததன் அடிப்படையில் மூன்று பேருக்கும் இன்று மாலைக்குள் சபாநாயகர் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிகிறது.