தமிழ்நாட்டில் உள்ள 47 திருக்கோயில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குமாறு, இந்து அறநிலையத் துறையின் செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள், துணை ஆணையர்கள் ஆகியோருக்கு, இந்து அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் ஏப்ரல் 24ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், பழனி, திருச்செந்தூர், மதுரை, திருத்தணி, திருவேற்காடு, திருவண்ணாமலை, திருவரங்கம், சமயபுரம், ராமேஸ்வரம், மயிலாப்பூர் உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களில் இருந்து நிதி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தினமலர் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, வெங்கடேசகுமார் உள்ளிட்ட பலர் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், தமிழகத் திருக்கோயில்களில் இந்து அறநிலையத்துறை ஊழியர்களைத் தவிர, மற்ற பணியாளர்களுக்கு மாதாந்திர சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை என்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த முக்கியப் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு ஏற்படுத்தப்படாத நிலையில், திருக்கோயிலின் உபரி நிதியை வழங்குவது என்பது, பணியாளர்களின் வாழ்வுரிமையை மீறுவதாகும். எனவே, இந்து அறநிலையத்துறையின் சுற்றறிக்கை சட்டவிரோதம் என அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.