இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது, “ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படி உயர்வை அடுத்தாண்டு ஜூலை வரையும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பலன் பெறுவதை ஓராண்டுக்கும் நிறுத்தி வைத்து, மற்றும் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தைக் குறைத்தும் அரசு ஆணை வெளியிட்டு பெரும் வஞ்சகத்தை நிகழ்த்தி இருக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது.
கால அவகாசங்கள் இருந்த சூழலிலும் மத்திய, மாநில அரசுகள் மெத்தனம் காட்டியதன் விளைவாக இன்று கரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நிதித்தேவையை காரணம் காட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு அடுத்தாண்டு ஜுலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. அதே போல தமிழ்நாடு அரசும் தற்போது ஆணை பிறப்பித்திருக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் தங்கள் உயிரை பணயம் வைத்து முழுவீச்சில் பணிபுரிந்து வருபவர்கள் மத்திய-மாநில அரசு ஊழியர்கள்.