இது தொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும். கரோனா பாதிப்புக்குள்ளான நிலையிலும் பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பொருளாதார நிலை சிறப்பாக உள்ளது என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதனை ஈடுகட்டுவதற்காக வழங்கப்படக் கூடிய ஒரு தொகைதான் அகவிலைப்படி உயர்வு. ஆனால் கரோனா நிவாரண நிதி தேவையை மத்திய அரசிடம் போராடி பெறுவதற்கு மாறாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை நிறுத்தி வைப்பதும், ஆண்டுதோறும் பெறக்கூடிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல.
இதற்கு தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) சார்பில் எங்களது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கனவே ஜனவரி மாதம் முதல் அறிவிக்கவேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவித்து விடுவிப்பதுடன், தொடர்ந்து விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி வழங்க வேண்டும்.
மேலும், ஊழியர்களின் செலவினங்களை ஈடுகட்டும் வகையில் விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தையும் விடுவிக்க வேண்டும்". இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.