சென்னை:மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவதால் இதற்கான ஏற்பாட்டை மிகவும் விமரிசையாக செய்துள்ளனர். ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் பல இடங்களில் சதுரங்க கட்டங்களைப்பிரதிபலிக்கும் வகையில் கறுப்பு, வெள்ளைக்கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. குறிப்பாக செஸ் போர்டு போல வரையப்பட்டிருக்கும் நேப்பியர் பாலம் உலக அளவில் வரவேற்பைப்பெற்றுள்ளது. மேலும் செஸ் போர்டு போல சட்டை அணியவும், செஸ் போர்டு போல் வரையப்பட்டிருக்கும் இடங்களில் மக்கள் ஆர்வமாக சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு டீக்கடை முழுவதும் செஸ் போர்டு போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு டீ குடிக்க வருபவர்கள் செஸ் விளையாடிக்கொண்டே டீ குடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்ணைக்கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கடைக்கு செஸ் விளையாடுவதற்கு என்று மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
செஸ் விளையாடத்தெரியாதவர்களும்கூட எப்படி விளையாடுவது என்று கேட்டு கற்றுக்கொள்கின்றனர். செஸ் விளையாடிக்கொண்டே டீ குடிக்கலாம் என்று கடைக்கு வந்தவர்கள், ஒரு டீ குடிக்கும் நேரத்தில் ஆட்டம் முடியாததால் அடுத்த டீ ஆர்டர் செய்து விளையாடி முடித்த பிறகு தான் அங்கிருந்து செல்கின்றனர். எப்படி பொழுதுபோகின்றது என தெரியாமல் மகிழ்ச்சியாக விளையாடிச்செல்கின்றனர். பார்த்த உடனே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் விதமாக இக்கடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடையே கூறிய அண்ணாநகரை சேர்ந்த தினேஷ், "அண்ணா நகரில் இருக்கக்கூடிய டீக்கடையில் விளம்பரத்திற்காகவும்; 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டும் ’சதுரங்க கட்டம்’ போல் வடிவமைத்துள்ளனர்.
செஸ் போட்டி விழிப்புணர்வுக்காக செய்துள்ள செயல் நன்றாக இருக்கிறது. இது எங்களின் பள்ளிப்பருவத்தை நினைவு கூற வைக்கிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து விளையாடிச்செல்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வை அரசு நன்றாக ஏற்படுத்தியுள்ளது" எனக்கூறினார்.