சென்னை மாநகர சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான ஆம்புலன்ஸ்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சாலையில் சென்றாலே, அனைத்து திசைகளிலிருந்தும் ஆம்புலன்ஸ் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது, அந்த அளவுக்கு அதற்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சில இடங்களில் ஆம்புலன்ஸிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், 'தமிழக சுதந்திர வாடகை வாகன சங்கம்' கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக டாக்சி ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகிறது. இதற்காக, தங்களது கால் டாக்ஸிகளை ஆம்புலன்ஸாக மாற்றி வருகின்றனர்.
எட்டு பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட கார்களில், பின்பக்க இருக்கைகளை அகற்றிவிட்டு ஓட்டுநருக்கும் பின் பகுதிக்கும் இடையே திரைச்சீலை வைத்து தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. காரின் பிற்பகுதியில் ஸ்டெரச்சர் உள்ளிட்டவை இணைத்து ஆம்புலன்ஸ் ஆக மாற்றப்பட்டுள்ளது.
காரின் பிற்பகுதியில் ஸ்டெரச்சர் அமைப்பு தற்போது ஊரடங்கு காலத்தில் 10 கிலோ ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காததால், ஆக்ஸிஜனை பொருத்த முடியாத சூழ்நிலை ஏற்படுவதாக இச்சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். கார் ஒன்றை, இவ்வாறு ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஆக மாற்றுவதற்கு, சுமார் 80 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படுவதாக இச்சங்கத்தினர் கூறுகின்றனர்.
இந்தச் சேவை அரசு மருத்துவமனைக்குச் செல்பவர்களுக்கு இலவசமாகவும்; தனியார் மருத்துவமனைக்குச் செல்பவர்களுக்கு பெட்ரோலுக்கு ஏற்படும் செலவை மட்டும் செலுத்தும் வகையில் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக வாடகை வாகன சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ,"டாக்சி ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசி உள்ளோம். தற்போது இந்தச் சேவையை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம். இதுபோன்ற நேரத்தில் மக்களிடம் பணம் ஏதும் வசூலிக்கக் கூடாது எனத் தீர்மானித்துள்ளோம்.
அதே நேரத்தில் இதற்கு அதிக பொருட்செலவு ஆகிறது. தமிழ்நாடு அரசு இவ்வாறு 100 வாகனங்களை டாக்சி ஆம்புலன்ஸ் ஆக மாற்றினால் ஓட்டுநர்களுக்கும் பணி கிடைக்கும். அதே நேரத்தில் உரிய நேரத்தில் நோயாளிகளை சிரமமின்றி மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல முடியும்" எனக் கூறினார்.
தற்போது இரண்டு ஓட்டுநர்கள் இணைந்து சென்னை முழுவதும் இந்தச் சேவையை வழங்கி வருகின்றனர். இனி வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு, இந்த திட்டத்தை கையிலெடுத்து செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்வதற்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும் பல இடங்களில் ஆட்டோக்களில் கொண்டு செல்லப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் தொற்று மேலும் பரவுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழலில் டாக்சி ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டால், தொற்று பரவுவதை குறைப்பதோடு, பொது ஊரடங்கில் வேலையில்லாமல் தவிக்கும் கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க முடியும். இவை அனைத்தை விட மிக முக்கியமாக ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காமல் சிரமப்படும் மக்களுக்கு உரிய சேவை கிடைக்கும்.
இதையும் படிங்க: ’புதுச்சேரியில் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க பாஜக சதி’ - திருமாவளவன் குற்றச்சாட்டு