தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கக் கூடிய 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையால் கொள்முதல் செய்யப்படும் இந்த மடிக்கணினிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. மடிக்கணினிகளானது அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளின் போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சிகள் சில மாவட்டங்களில் உரிய நேரத்தில் நடத்தப்படாததால்
பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மடிக்கணினிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள மடிக்கணினிகளை சமூக விரோதிகள் திருடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.