தலைமைச் செயலகத்தில் இன்று, 2017-2018-ஆம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையினை வழங்குவது தொடர்பாக, அமைச்சர்கள் அடங்கிய குழு கூட்டமானது காணொலி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், முதன்மைச் செயலாளர், வணிகவரி ஆணையர் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ”2017-18 ஆண்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 4,321 கோடி ரூபாயையும், வரவேண்டிய நிலுவையான 12,250 கோடி ரூபாயையும் மத்திய அரசு தார்மீக அடிப்படையில் கொடுக்க வேண்டும். கரோனா நோய் தடுப்புக்காக 9,000 கோடி ரூபாய் செலவாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை தருமாறு கேட்டுள்ளோம்.