சசிகலா, தினகரன் ஆகியோரின் பலம், பலவீனம் அதிமுகவினருக்கு தான் தெரியும் எனவும், அதிமுக - அமமுக இணைப்பு குறித்து அதிமுக தான் முடிவெடுக்கும் என்றும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021; அரசியல் கட்சிகளின் கூட்டணி நகர்வுகள் உடனுக்குடன்! - மக்கள் நீதி மய்யம்
13:59 March 03
சசிகலா - தினகரன்; பலம் - பலவீனம் அதிமுகவிற்கு தெரியும்!
13:48 March 03
சமக, மநீம, ஐஜேகே கூட்டணி உறுதி!
சமத்துவ மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயகக் கட்சி (இஜக) ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சமக தலைவர் சரத்குமார் தூத்துக்குடியில் நடைபெற்று வரும் பொதுகூட்டத்தில் தெரிவித்தார். இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கமல் ஹாசன் தான் என்று கூறிய அவர், ச.ம.கவைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவர் எனவும் கூறினார்.
13:44 March 03
சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலாவை அதிமுகவில் இணைக்குமாறு பாஜக நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுவது 100 விழுக்காடு வதந்தி என்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
13:26 March 03
சென்னையில் போக்குவரத்து நெரிசல்
அதிமுக - அமமுகவினர் விருப்ப மனுதாக்கல் செய்ய குவிந்ததால் சென்னையின் முக்கிய சாலைகளான ராயப்பேட்டை, அண்ணா சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று முகூர்த்தநாள் என்பதோடு, அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் என்பதும் போக்குவரத்து நெரிசலுக்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
12:50 March 03
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விருப்பம்- ஜிகே வாசன்!
அதிமுக - தமாகா கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையும் எனவும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், எதிர்க்கட்சிகளை வீழ்த்தும் வகையிலான தொகுதிப் பங்கீடு இலக்கை நிர்ணயிப்போம் எனக் கூறியுள்ளார்.
12:02 March 03
விருப்ப மனு வாங்கக் குவிந்த அமமுகவினர்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில், சட்டப்பேரவையில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வருகை புரிந்துள்ளனர். தற்போது வரை 800க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுவை வாங்கிச் சென்றுள்ளனர்.
11:42 March 03
இந்திய குடியரசு கட்சி - அதிமுக சந்திப்பு
மின் துறை அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
10:43 March 03
முருகனுடன் இயக்குநர் சுந்தர்.சி சந்திப்பு
கமலாயத்தில் பாஜக தலைவர் முருகன் உடன் குஷ்புவின் கணவர் சுந்தர். சி சந்தித்து பேசி வருகிறார்.
10:27 March 03
திமுக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நாள்
திமுக கட்சி 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை மார்ச் 11ஆம் தேதி வெளியிடவுள்ளது. நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10:11 March 03
அமமுக விருப்ப மனு விநியோகம்
அமமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் இன்று (மார்ச்3) தொடங்கியது.
09:25 March 03
அதிமுக - தமாகா கூட்டணி பேச்சுவார்த்தை
அதிமுக தலைவர்களுடன் தமாகா தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, தனியார் விடுதியில் 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிகே வாசன் கலந்துகொள்கிறார்.