தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்டத்தில் 74 விழுக்காடு வாக்குப்பதிவு - ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் 74 விழுக்காட்டினர் தங்களின் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021

By

Published : Oct 7, 2021, 6:29 AM IST

சென்னை: திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன.

இந்தத் தேர்தலில் 27 ஆயிரத்து மூன்று பதவி இடங்களுக்குத் தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் போட்டியிட 98 ஆயிரத்து 151 பேர் வேட்புமனு தாக்கல்செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனைக்குப் பின்பு ஆயிரத்து 166 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

14 ஆயிரத்து 571 பேர் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதைத்தொடர்ந்து இரண்டாயிரத்து 981 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல்கட்ட தேர்தல்

இதன் காரணமாக ஒன்பது மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவி இடங்களுக்குத் தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டது. இந்தப் போட்டியில் 79 ஆயிரத்து 433 பேர் களத்தில் இருந்தனர்.

இந்த ஒன்பது மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் 78 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், ஆயிரத்து 577 கிராம ஊராட்சித் தலைவர் பதவி இடங்களுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத்தம் 14 ஆயிரத்து 662 இடங்களுக்கு முதல்கட்ட தேர்தல் அமைதியாக நடைபெற்றது.

வாக்குப்பதிவு

இந்த நிலையில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முன்னதாக 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் திறந்து காண்பிக்கப்பட்டன. பின்னர் சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காலையிலேயே வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக ஆர்வமாக வந்தனர். வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ததுடன், கிருமிநாசினி வழங்கி கைகளைச் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துவந்தனர்.

பின்னர், தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றைக் காண்பித்து தங்களது வாக்குகளை வாக்குச்சீட்டு முறையில் பதிவுசெய்தனர். வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்பட்டது.

இளம் வாக்காளர்களும் தங்களது வாக்குகளை உற்சாகமாகப் பதிவுசெய்தனர். கிராம மக்களும் ஆர்வமாக வந்து வாக்களித்துச் சென்றனர். வயதானவர்களை அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தூக்கிவந்து வாக்களிக்க வைத்தனர்.

மாவட்ட வாரியாகப் பதிவான வாக்குகள்

  1. காஞ்சிபுரம் - 80 விழுக்காடு
  2. செங்கல்பட்டு - 67 விழுக்காடு
  3. விழுப்புரம் - 81.36 விழுக்காடு
  4. கள்ளக்குறிச்சி - 72 விழுக்காடு
  5. வேலூர் - 67 விழுக்காடு
  6. ராணிப்பேட்டை - 81 விழுக்காடு
  7. திருப்பத்தூர் - 78 விழுக்காடு
  8. திருநெல்வேலி - 69 விழுக்காடு
  9. தென்காசி - 74 விழுக்காடு

ABOUT THE AUTHOR

...view details