தேசிய சுகாதார இயக்ககத்தின் ட்விட்டர் பக்கத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அந்த குறும்படத்தில், பெரியம்மை பரவிய அந்தக் காலத்தையும், கரோனா பரவி வரும் இக்காலத்தையும் ஒப்பிட்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியம்மை நோய் தாக்கிய ஊர்களுக்கு வெளியூரில் இருந்து, யாரும் வர மாட்டார்கள் அப்போது. அதேபோல், கரோனாவால் தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அன்று அம்மை வந்தால் வீட்டில் வேப்பிலை கட்டுவது போல், இன்று கரோனா பாதித்தவர் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக காட்சியமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட குறும்படம்! பெரியம்மை வந்தால் இளநீர் போன்றவற்றை கொடுப்பது போன்று, தற்போது நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க கபசுரக் குடிநீர் போன்றவைக் கொடுக்கப்படுவதாக வசனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ” அரை நூற்றாண்டுக்கு முன்னர் அம்மை நோய் வந்தபோது என்ன சூழ்நிலை இருந்ததோ, அதே போல் தான் கரோனாவையும் தற்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அம்மை நோய் முப்பது சதவீதம் பேருக்கு இறப்பினை ஏற்படுத்தியது. கரோனாவால் 100 பேரில் மூவர் இறக்கின்றனர். பெரியம்மை மற்றும் கரோனா ஆகிய இரண்டிலுமே தனிமனித இடைவெளி என்பது மிக முக்கியமானது.
பெரியம்மை போலவே, கரோனா பாதித்தவரையும் வீட்டில் தனிமைப்படுத்தி அவர் பயன்படுத்தும் பொருட்களை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும். இரண்டிலுமே தனி நபர் பாதுகாப்பு என்பது கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். எனவே, அனைவரும் பாதுகாப்புடன் கரோனாவை வீழ்த்துவோம்” என அந்த குறும்படக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மலைவாழ் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள் வழங்கிய தொழிலதிபர்